வைகோ 
கட்டுரை

பாலையில் பொலிந்த நிலா!

நாற்காலிக்கனவுகள்

மாலன்

அரசியலில் ஒருவர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு எத்தகைய திறன்கள் இருக்க வேண்டும்?

வசீகரமான பேச்சாற்றல், வரலாற்று அறிவு, சமகாலப் பிரச்சினைகள் குறித்து ஒரு பார்வை, அவசியமானால் அதற்காக வீதியில் இறங்கிப் போராடும் போர்க்குணம், பரப்புரை செய்வதற்கு ஊர் ஊராய்ச் சென்று மக்களைச் சந்திப்பதில் ஆர்வம், சிறை செல்ல அஞ்சா மன உரம், நாட்டின், மாநிலத்தின் தலைவர்களோடு உறவைப் பேணுதல் இவைதான் எனப் பட்டியலிட முடியும்.

இவற்றில் எது வைகோவிடம் இல்லை, பின் ஏன் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. வெற்றி பெறவில்லை என்பது மட்டுமல்ல, தொடர்ந்து தோற்றுக்கொண்டே இருக்கிறார் என்ற அடுத்த கேள்வியை வீசினால் வரலாறு திகைத்துப் போகும்.

1964ல் கோகலே மன்றத்தில், அண்ணா முன்னிலையில், இந்தி எதிர்ப்புக் கருத்தரங்கில் முதன் முதலாகப் பேசியதிலிருந்து பின்னர், 18 ஆண்டுக்காலம் மாநிலங்களவையிலும், பின்னர் இரண்டாண்டுகள் மக்களவையிலும் முழங்கிய போதும் சரி அவர் மற்றவரை ஈர்க்கும் பேச்சாளராகவே திகழ்ந்திருக்கிறார். அவரளவுக்கு வரலாறுகளை வாசித்தவர்கள் இன்றைய அரசியலில் அதிகம் பேர் இருக்கமாட்டார்கள். அதை வரிசை பிறழாமல் எடுத்துச் சொல்வதிலும் வல்லவர். முல்லைப் பெரியாறு, காவிரி, அமராவதி என்று தமிழக நீர் ஆதாரங்களுக்காகவும், தூத்துக்குடி ஸ்டெர்லைட், கூடங்குளம் அணு மின் நிலையம் எனச் சுற்றுச் சூழல் பிரச்சினைகளுக்காகவும் போராட்டங்கள் நடத்தியவர். தடா, பொடா உள்ளிட்ட கொடுஞ்சட்டங்களின் கீழ் சிறைக்கு அனுப்பப்பட்டவர். ஐம்பதாண்டுப் பொதுவாழ்வில் 53 மூன்று முறை சிறை சென்றவர் இவராகத்தான் இருக்கும். வாஜ்பாய் முதல் விஜயகாந்த் வரை சகலருக்கும் நண்பர். எளிதில் யாரையும் தானாகச் சந்திக்கும் வழக்கமில்லாத ஜெயலலிதா கூட ஓரு நடைப்பயணத்தின் போது எதிரே வந்தவரைக் கண்டு காரை நிறுத்திப் பேசுமளவிற்கும், சிறையிலிருந்தவரை கருணாநிதி தேடிச் சென்று சந்திக்குமளவிற்கும் நல்லெண்ணெத்தையும் நட்புறவையும் பேணியவர்தான்.

அப்படியிருந்தும் வைகோ ஏன் வெற்றி பெறவில்லை? அதற்கான விடை ஒரு ஈரெழுத்துச் சொல். வைகோ. ஆம் வைகோவின் தோல்விகளுக்குக் காரணம் வைகோவேதான்.

என் நோக்கில் வைகோவின் பலவீனங்கள் மூன்று. 1. அவரிடம் இருக்கும் தன்னைப் பற்றிய மிகையான சுய பிம்பம். 2. அரசியல் அணுகுமுறையில் தன்னை ‘அப்டேட்' செய்து கொள்ளாமை. 3.அவரது முரண்பாடான, புதிரான நடவடிக்கைகளால் அவர் இழந்துவிட்ட நம்பகத் தன்மை.

முதன் முறையாக வைகோவை திமுகவிலிருந்து நீக்கும் முயற்சி 1991ல் நடந்தது. 1991 நவம்பர் 26 ஆம் தேதி கூடிய செயற்குழுவில் வைகோ மீது பல விமர்சனங்களை கருணாநிதி வைத்தார். 1991 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க இரண்டு இடங்கள் தவிர எல்லா இடங்களிலும் தோல்விகண்டிருந்த சூழலில் அந்தச் செயற்குழு கூடியது. அன்றே வைகோ நீக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் அன்று வைகோவிற்கு செயற்குழுவில் இருந்த ஆதரவின் காரணமாக அந்த முடிவு தள்ளிப்போடப்பட்டது. இரண்டாண்டுகளுக்குப் பிறகு 1993ல் வைகோ தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டபோது அவருடன் 9 மாவட்டச் செயலாளர்களும், 400 பொதுக் குழு உறுப்பினர்களும் கட்சியிலிருந்து வெளியேறினார்கள். இது போன்ற சம்பவங்களாலும், கருணாநிதியோடு இணக்கமாக இல்லாத பிரபாகரன் இவரோடு நெருக்கமாகப் பழகியதாலும், விடுதலைப் புலிகள் தங்கள் பிரச்சார பலத்தால் ஐரோப்பாவில் கட்டமைத்த பிம்பத்தினாலும், பின்னர் வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவரோடு தொலைபேசியில் அழைத்துப் பேசக் கூடிய அளவிற்கு அகில இந்திய அளவில் அறியப்பட்டவராக இருந்ததினாலும் வைகோ தன்னைக் கருணாநிதிக்கும், ஜெயலலிதாவிற்கும் இணையான ஆளுமையாகக் கருதிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் மக்கள் அவரை அவர்களுக்கு இணையாகக் கருதவில்லை.

50களுக்குப் பிறகு தி.மு.க தனது மேடைப் பேச்சாற்றலால் வளர்ந்த கட்சி. அண்ணா, நெடுஞ் செழியன், கருணாநிதி ஆகியோர் பேச்சுக்களைக் கேட்க மக்கள் கட்டணம் செலுத்தி வந்து கூடிய காலம் அது. அன்றைய தி.மு.க தலைவர்கள், அண்ணாவின் வழியில், உள்ளூர் அரசியல் மட்டுமின்றி உலக அரசியல், வரலாறு, தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் நல்ல புலமை கொண்டு விளங்கினார்கள். ஆங்கிலத்தில் சரளமாக மேடைகளில்  பேசுவது என்பது வியக்கத்தக்க ஆற்றலாகக் கருதப்பட்ட காலம் அது. தமிழகத்தில் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் பெருகிக் கொண்டிருந்த காலம் அது என்பதால் அன்று அதற்குப் பெரும் வரவேற்பும் மரியாதையும் இருந்தது. சூட் அணிந்த திராவிட இயக்கத் தலைவர்களின் படங்களைத் தொண்டர்கள் வீடுகளில் சட்டம் போட்டு மாட்டிப் பெருமிதம் கொண்டார்கள். ஆனால் இன்று அந்த நிலை இல்லை. அலங்காரத் தமிழில் வரலாற்றுச் சம்பவங்கள், ஆங்கில மேற்கோள்கள், புள்ளிவிவரங்கள் அடுக்கப்பட்ட பேச்சுக்களைக் கேட்கும் பொறுமை மக்களுக்கு இல்லை. ஆனால் இன்றும் வைகோ அண்ணா பாணியிலேயே பேசுகிறார். அது இளைஞர்களை ஈர்க்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தி.மு.க.விலிருந்து வெளியேறிய வைகோ தன்னை தி.மு.க.விற்கு மாற்றாக முன்னிறுத்தவில்லை. மாறாக வாரிசு அரசியல் இல்லாத தி.மு.க.வாகவே தன்னைக் கட்டமைத்துக் கொண்டார். தி.மு.க தலைமைக்கு எதிராக அவர் வைத்த முக்கியமான குற்றச் சாட்டு அண்ணா காலத்து உட்கட்சி ஜனநாயகம் மறைந்து விட்டது, கருணாநிதி ஸ்டாலினுக்கு பட்டாபிஷேகம் செய்யத் துடிக்கிறார் என்பது. இதில் கருணாநிதியின் தி.மு.க, அண்ணா காலத்துத் தி.மு.க இல்லை என்ற கருத்தை முன்வைத்து எம்.ஜி.ஆர் ஏற்கனவே அதற்கான பலனை அறுவடை செய்து கொண்டுவிட்ட நிலையில் வைகோவிற்கு பலன் கிடைக்கவில்லை. கருணாநிதி ஸ்டாலின் விவகாரத்தை மிக சாமர்த்தியமாகக் கையாண்டார். 1996ல் ஆட்சிக்கு வந்த போது கூட அவருக்கு அமைச்சரவையில் இடமளிக்கவில்லை. அதுவும் தவிர நாடு முழுக்க வாரிசு அரசியல் கலாச்சாரம் எல்லாக் கட்சிகளிலும் பரவி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகிவிட்டது. 

 அவர் தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்ட காலத்தில் தி.மு.க தேர்தல் அரங்கில் பலவீனப்பட்டிருந்தது. அதற்கு ராஜீவ் படுகொலை ஒரு காரணமாக அமைந்தது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜெயலலிதா அ.தி.மு.க.வை தி.மு.க.விற்கு மாற்று என முன்னிறுத்திக் கொண்டிருந்தார். ஆனால் வைகோ இன்னொரு தி.மு.க.வாக கட்சியை முன்னிறுத்தினார். ஒரிஜினல் தி.மு.க. இருக்கும்போது இன்னொரு தி.மு.க எதற்கு என்றே மக்கள் கருதியிருக்க வேண்டும்.

 1996 அவர் தனிக்கட்சி கண்ட பிறகு சந்தித்த முதல் தேர்தல். தி.மு.க, அ.தி.மு.க இரண்டிற்கும் மாற்றாகத் தன்னை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட்களோடும், ஜனதாதளத்தோடும் சேர்ந்து களம் இறங்கினார். அ.தி.மு.க ஊழல் ஆட்சி, தி.மு.க குடும்ப ஆட்சி என்பது அவர் பிரச்சாரத்தின் மையக் கருத்து. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க அதுவரை கண்டிராத தோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதாவே தோற்றுப் போனார். ஆனால் அ.தி.மு.க.விற்கு மாற்று தி.மு.க என மக்கள் முடிவு செய்திருப்பது நிரூபணமாயிற்று. அந்தத் தேர்தலில் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியிலும் சிவகாசி மக்களவைத் தொகுதியிலும் போட்டியிட்ட வைகோ இரண்டிலும் தோற்றுப் போனார்.  அப்போது கூட அவர் தி.மு.க.வின் வலிமையையோ, அ.தி.மு.கவின் தோல்விக்கான காரணங்களையோ உணர்ந்தாற்போல் தோன்றவில்லை. ‘‘காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடும் போது சில சந்தன மரங்களும் அடித்துச் செல்லப்படும். நாங்களும் அ.தி.மு.க.விற்கு எதிரான அலையில் அடித்துச் செல்லப்பட்டோம்'' என்று தன்னைத் தேற்றிக் கொண்டார்.

1996ல் எந்த அ.தி.மு.க.வை ஊழல் கட்சி என்று பிரச்சாரம் செய்தாரோ அதே அ.தி.மு.க.வுடன் 1998ல் மக்களவைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொண்டார். வாஜ்பாயை பிரதமராக்க என்று அதற்கு விளக்கமளித்தார். அ.தி.மு.க.வோடு கூட்டணி கண்டது ஒரு முரண்பாடு என்றால்,திராவிடக் கொள்கைகளுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சி எனக் கருதப்பட்ட பா.ஜ.க.வை உயர்த்திப் பிடித்தது மற்றொரு முரண்பாடு. அதைவிடப் பெரிய முரண்பாடு, 1999ல் தன்மீது கொலைப்பழி சுமத்திய கருணாநிதியோடு வைத்துக்கொண்ட கூட்டணி. பின்னர் 2001 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் கேட்ட ஒரு குறிப்பிட்ட தொகுதி (சங்கரன் கோயில்) கிடைக்கவில்லை என்பதற்காக தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறினார் (அப்போது அவர் கேட்ட தொகுதிகள் 25. தி.மு.க தர முன் வந்தது 21) 2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அவரைப் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்தார். ஆனால் 2006ல், கடைசி நிமிடத்தில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக் கொண்டு தன்னைச் சிறை வைத்த ஜெயலலிதாவோடு கூட்டணி வைத்துக் கொண்டார். இத்தனைக்கும் அவர் சிறையில் இருந்த போது அவரைச் சென்று கருணாநிதி சந்தித்தார். 2004ல் திமுக &காங்கிரஸ் கூட்டணியில் அவரது கட்சி போட்டியிடவும் செய்திருந்தது. 

தி.மு.க, அ.தி.மு.க எதிர்ப்பு, பின் அ.தி.மு.க.வுடன் கூட்டணி, பா.ஜ.க ஆதரவு, பின் தி.மு.க.வுடன் கூட்டணி, காங்கிரஸ் ஆதரவு, பின் தி.மு.க.வின் உறவை முறித்துக்கொண்டு அ.தி.மு.க கூட்டணிக்குத் தாவல் என்று அவரது அரசியல் குழப்பங்களின் காரணமாக அப்போதே அவர் மீதிருந்த நம்பிக்கை சரிய ஆரம்பித்தது. 2009 மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்து 4 இடங்களில் போட்டியிட்ட ம.தி.மு.க ஒன்றில் மட்டுமே வென்றது. 2011ல் தேர்தலைப் புறக்கணித்தது. 2016ல் மக்கள் நலக் கூட்டணியில் ம.தி.மு.க போட்டியிட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் வைகோ மனுத்தாக்கல் செய்வதிலிருந்து பின் வாங்கினார். சரிந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வைகோ எந்தப் பெரிய முயற்சியும் செய்யவில்லை என்பது எதார்த்தம். 

வைகோ பாடம் கற்றுக் கொண்டாரா எனத் தெரியாது. ஆனால் அவரது அரசியல் பயணம் மற்றவர்களுக்கு ஓர் பாடம். அண்ணா 1965ல் சிங்கப்பூரில் தமிழர்களிடம் உரையாற்றும் போது சொன்ன ஒரு வாக்கியம் அவரது கடமை கண்ணியம் கட்டுப்பாட்டைப் போல பிரசித்தமானது. ‘‘காலம் அறிந்து செயல்படுக; வகை அறிந்து செயல்படுக; இடமறிந்து செயல்படுக.'' அண்ணா இன்றிருந்தால் வைகோவுக்கும் இதைத்தான் சொல்லியிருப்பார்.

ஏப்ரல், 2018.